'அறத்தமிழன் பேரியக்கம்' சாதி மதம் அரசியல் கடந்த ஒரு சமூக மறுமலர்ச்சி இயக்கமாகும்.
2021ம் ஆண்டு தமிழ்த்திரு. விஜய் சீத்தாராமன் அவர்களால் பதிவு செய்யப்பட்ட இயக்கமாக இருந்திருந்தாலும், 2017ம் ஆண்டுகளிலிருந்தே, மக்கள் நலன் சார்ந்த பணிகளில், மாணவர்களை நெறிபடுத்தும் பணிகளில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு, தன் பயணத்தை துவங்கியிருந்தது.
எதிர்கால தலைமுறையை, முறையான பாதையில் வழி நடத்துவதையே தன் முதன்மை இலக்காகக் கொண்டு செயல்படுகின்றது.
இம்மூன்று முக்கிய முழக்கங்களைத் தன் முன்னெடுப்பாகக் கொண்டு அறத்தமிழன் பேரியக்கம் செயல்படுகின்றது.
குறிப்பாக, தமிழர் அறம், பண்பாடு, வரலாறு காத்தல், சமூக சிந்தனை, அரசியல் தெளிதல், சமூக நீதி, தலைமைத்துவம் என அனைத்து அடிப்படைப் பண்பினையும் வளரும் எம் தமிழ்ச் சமூகம் பெற வேண்டும் என்பதும், போதை, புகை, கேளிக்கை, தவறான வாழ்க்கை முறை என்று நம் தமிழ்ச்சமூகம் சீர்கெட்டுவிடாமல், சரியான முறையில் வழிகாட்டுவதும், அறத்தமிழன் பேரியக்கத்தின் பணிகளாக உள்ளன.
தமிழர்கள் தங்களின் தாய்மொழி வாயிலாகவே அடிப்படைக் கல்வியைப் பெற வேண்டும் என்ற முனைப்போடும், தமிழ் மொழி வழியிலான கல்விக்கு முதலிடம் என்ற முழக்கத்தோடும், அறத்தமிழன் துவக்க பள்ளிகளை மாவட்டம் முழுவதும் உருவாக்குவதற்கான மாபெரும் கனவுத்திட்டத்தை, நனவாக்கும் விதத்தில் நம்முடைய பேரியக்கம் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது.
அறத்தமிழனின் முதற் துவக்கப்பள்ளி கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியில் அறத்தமிழன் பள்ளி வளாகத்தில் இயங்கிக் கொண்டிருக்கின்றது. மாணவர்களுக்கு அளிக்கக்கூடிய கல்வி என்பது, கட்டணமில்லாமல் வழங்கப்பட வேண்டும் என்ற ஒற்றைக் குறிக்கோளை மனதில் கொண்டு மிகச் சிறப்பான கட்டமைப்போடு கட்டணமில்லா கல்வி முறையில் நமது முதற்பள்ளி செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது.
சிறப்புப் பயிற்சி வகுப்புகளுக்குச் செல்ல முடியாத நிலையில் இருக்கக்கூடிய பிள்ளைகளுக்கு, அவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்காக அந்திப்பயிலகம் - என்ற மாலை நேர பயிற்சி வகுப்புகளை மாவட்டம் தோறும் எடுப்பதற்கு அறத்தமிழன் பேரியக்கம் செயலாற்றிக் கொண்டிருக்கிறது. திருச்சியிலும், விருத்தாசலத்திலும் அந்திப்பயிலகங்கள் துவங்கப்பட்டு அங்கும் மாணவர்களுக்கு, கல்வியையும் ஒழுக்கத்தையும், தமிழர் அறத்தையும் விதைத்துக் கொண்டிருக்கிறது நமது பேரியக்கம்.
பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு ஒழுக்க நெறிகளை போதிப்பதற்காகவும், உறவு முறைகளை பேணுவதற்கும், இந்த சமூகத்தையும், மொழியையும் நேசிப்பதற்குமான கருத்துக்களை உள்ளடக்கிய மானுடப் பட்டறை என்ற வாழ்வியல் பயிற்சியை, தொடர்ந்து பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் தேடிச் சென்று நம் பேரியக்கம் வழங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த மானுடப்பட்டறை என்பது மாணவர்களுக்கு மட்டுமல்ல... பெரியோர்களாகிய குடும்பத் தலைவர்களுக்கும் குடும்பத் தலைவிகளுக்கும் இணைத்தே வழங்கப்படுகிறது. சமுதாய மாற்றம் என்பது நம்முடைய வீட்டிலிருந்தே துவங்க வேண்டும். நம்மை நாம் வளப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படைக் கொள்கையினால் இந்த வாழ்வியல் பயிற்சி அவர்களுக்கும் வழங்கப்படுகிறது.
தமிழர்கள் உலகின் பல நாடுகளில் பல்வேறு காரணிகளால் பரவி வாழ்வது நாமறிந்ததே! அவ்வாறு பரவி வாழும் நம் தமிழின மக்கள், வணிகம் சார்ந்தும், மேலும் பலத் துறைகளிலும் தவிர்க்க முடியாத ஆளுமைகளாக கோலோச்ச வேண்டும் என்பதும், நம் நீண்ட கால இலக்கு. அதற்கான சரியான பாதையினை கட்டமைத்துக் கொடுப்பது அறத்தமிழனின் தலையாயக் கடமையாக கொண்டுள்ளோம்.
சமுதாய மாற்றம் என்பது, இளைய தலைமுறை பிள்ளைகளிடம் மட்டுமே எதிர்பார்ப்பதை விட, நம் போன்ற பெற்றோரிடத்திலிருந்தும் அந்த மாற்றத்தை நாம் கொண்டு வர வேண்டும்... அதுவே முழுமையான சமுதாய மாற்றத்தினை உருவாக்கித் தரும்.
இதனை ஒவ்வொரு தமிழனும் கடைபிடித்தாலே நம் தமிழ்ச்சமூகமும், நமது நாடும் ஏற்றம் கொண்ட நாடாக மாற்றம் பெறும்.
அறத்தமிழனின் புகழ் உலகெலாம் பரவிடச் செய்வோம்!
இளைய தலைமுறைக்கான புதியதொரு உலகத்தை நாம் படைப்போம்.
குமுதம் சாலை, அண்ணாமலை நகர், திருச்சி, 620018
செயலாளர், மாநில வளர்ச்சிக்குழு





